WIKILEAKS/ விக்கிலீக்ஸ் - 2


தங்கமலை ரகசியம் என்ற பழைய சினிமாவில் ஒரு நகைச்சுவைக் காட்சி உண்டு. அந்த ஊரின் ராஜாவுக்குக் கழுதைக் காது. அது அவருக்கு சவரம் செய்யும் நாவிதருக்கு மட்டும் தெரிந்த ரகசியம். வெளியில் சொன்னால் தலை காலி என்றிருப்பார் ராஜா. ஆனால் ரகசியத்தைத் தனக்குள் வைத்துக் கொள்ள முடியாத நாவிதரோ தன் மனைவியிடம் சொல்லி விடுவார். மனைவி வெளியில் சொன்னால் கணவன் தலை போய் விடும். ஆனால் அவளுக்கு வெளியேயும் சொல்ல முடியாமல் உள்ளேயும் வைத்துக் கொள்ள முடியாமல் வயிறு வெடித்து விடும் அளவு உப்பி விடும். அவள் நாவிதரின் யோசனைப்படி ஒரு குழியில் ரகசியத்தைச் சொல்லி மூடி வைத்து வயிறு வெடிக்காமல் காப்பாற்றிக் கொள்வாள். ஆனால் குழியில் இட்ட ரகசியம் ஒரு செடியாக மரமாக வளர, ரகசியம் காக்கும் மரம் என்பதை அறியாமல் அந்த மரத்தை வெட்டி ஒரு மிருதங்கம் செய்வார்கள். அதை ராஜாவின் சபைக்குக் கொண்டு முதன் முதலில் வாசிக்கும் பொழுது ஒவ்வொரு அடிக்கும், ராஜா, காது, கழுதை, காது என்று மிருதங்கம் ஒவ்வொரு வார்த்தையாகக் தாள கதியில் சப்திக்கும். வேகமாக அடித்தால் வேகமாக அதையே வேகமாக தாளம் போடும். கோபத்தில் ராஜா மிருதங்கத்தைத் தூக்கிப் போட்டுச் சுக்கு நூறாக உடைக்க அதின் ஒவ்வொரு சில்லும் ”ராஜா காது கழுதைக் காது” என்று குய்யோ முறையோ என்று கத்தி, கூச்சல் போட்டு ஊருக்கே ரகசியத்தைப் பரப்பிவிடும். இந்தக் கதைக்கும் ஒபாமாவின் பெரிய காதுகளுக்கும் ஏதும் சம்பந்தமில்லை என்றாலும், இன்று அமெரிக்காவில் கிட்டத்தட்ட இதே கதைதான் நடந்து வருகிறது.







விக்கிலீக் என்ற ரகசிய அமைப்பை ஐரோப்பா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகள், சீனா போன்ற ஒரு சில அடக்குமுறை நாடுகளின் அரசுகள், அதிபர்கள், அதிகாரிகள் செய்யும் ஊழலைப் பொதுவில் கொணர்ந்து அந்தந்த சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக மக்கள் புரட்சியை உருவாக்குவதே நோக்கம் என்று அறிவிக்கப்பட்டு அந்தந்த நாடுகளின் தன்னார்வ கம்ப்யூட்டர் ஹாக்கிங் நிபுணர்களும் தகவல் தரும் ஆர்வலர்களும் சேர்ந்து துவக்கியுள்ளனர். ஜூலியன் அசாங்கே என்ற ஆஸ்திரேலியர்தான் இதை ஆரம்பித்ததாகக் கூறுகிறார்கள். அவர் தனி நபர் இல்லை என்றும் அவருடன் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வ கம்ப்யூட்டர் செக்யூரிட்டியில் நிபுணத்துவம் உள்ள தொண்டர்கள் உள்ளார்கள் என்றும், அனைவரும் இணைந்து இந்த தளத்தை நடத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் இதன் சர்வர்கள் இயக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அந்த சர்வர்களுக்கு கண்ணாடிப் பிரதி சர்வர்கள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஓரளவுக்கு இந்த நாடுகள் இந்த அமைப்பினருக்கு சட்டபூர்வமான பாதுகாப்பும் அளித்து வருகிறார்கள். உலகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான ஊழல்களின், அடக்குமுறைகளின் ஆதாரங்கள் இந்த அமைப்புக்கு வந்த வண்ணம் உள்ளன. அதை 600க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஆராய்ந்து இந்தத் தளத்தில் ஏற்றுகிறார்கள்.



நமது ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் விளையாட்டு ஊழல், இன்ஷூரன்ஸ் ஊழல் போன்ற மெகா ஊழல்களின் ஆதாரங்களும், நமது ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் செய்யப் பட்ட மோசடிகளும், நமது அரசியல்வாதிகளின் ஸ்விஸ் கணக்குகளும், அடிக்கடி ரகசியமாக வெளிநாட்டுக்கு போய் வரும் மந்திரிகள், முதல்வர்கள், துணை முதல்வர்கள் பற்றிய ஆதாரங்களும் யாரிடமாவது இருந்தால் அவர்களது அடையாளம் வெளிப்படுத்தாமல் அதன் நம்பகத்தன்மையை ஆராய்ந்து விட்டு விக்கிலீக்கின் தளத்தில் அறிவித்து விடுகிறார்கள். அதற்கப்புறம் உடைந்த சில்லுகள் போட்ட கூச்சல் போல உலகெங்கும் “ராஜா காது கழுதைக் காது” என்று ரகசியம் அம்பலமாகிவிடும். அதன் பிறகு மாறுதலைக் கொணர்வது அந்தந்த நாடுகளில் உள்ள எதிர்க்கட்சிகள், புரட்சி அமைப்புகளின் அல்லது ஓட்டளிக்கும் மக்களின் பாடு. இனிமேல் ஆட்டோ பயம் இல்லாமல், குண்டர் சட்டம் பற்றி கவலைப்படாமல், டிராஃபிக் ராமசாமி முதல் சுப்ரமணிய சுவாமி வரை, உமா சங்கர் முதல் கோபிகிருஷ்ணன் வரை, டெஹல்கா முதல் ஜூவி வரை அனைவருமே விக்கிலீக்கையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆதாரங்களை அனுப்பியவர்களை விக்கிலீக் காண்பித்துக் கொடுக்காது. உலகம் முழுவதும் இணைய வலைப்பின்னல்களில் யாரை யார் வேவு பார்க்கிறார்கள் யாரை யார் கண்காணிக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை.




இதுவரை விக்கிலீக் 5 லட்சம் பக்கங்களிலான பல்வேறு ஊழல்களின் உண்மைகளைத் தன் தளத்தில் வெளியிட்டிருக்கிறது. கென்யாவில் நடந்த படுகொலை பற்றிய உண்மைகள், ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் சிவிலியன் மக்களைத் தவறுதலாகக் கொன்ற ஹெலிகாப்டர் தாக்குதல், அமெரிக்க துணைஜனாதிபதியாகப் போட்டியிட்டு ரஷ்யா தன் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரியும் என்பதால் தனக்கு வெளியுறவுத் துறை அறிவு இருக்கும் என்று உளறிய சாராப் பெல்லனின் தனி யாகூ இமெயில்கள், ஐரோப்பாவின் சில வங்கி ஊழல்கள், க்ளைமேட் சேஞ்ச் அமைப்பில் நடந்த ஊழல்கள், செப்டம்பர் 11 தாக்குதலின் பொழுது விமானங்களில் இறந்தவர்கள் செல்ஃபோனில் பரிமாறிய பேச்சுக்கள் ஆகியவற்றை விக்கிலீக் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.





ஆனால் சென்ற ஜூலை இறுதியில் வெளியிட்ட 90000 பக்கங்களுக்கும் மேலான ஆப்கான் போர் பற்றிய ரகசியங்களின் வெளியீடே அணுகுண்டு போன்ற வெடிப்பாக நிகழ்ந்தது. இதற்கு முன்னால் இந்த அளவு பரபரப்பை ஏற்படுத்திய ’அம்பலத்துக்கு வந்த ரகசியம்’ பெண்ட்டகன் பேப்பர் என்று சொல்லப்பட்ட வியட்நாம் போர் பற்றிய ஆவணங்களே. அதற்குப் பிறகு இதுதான் பெரிய அளவிலான ஒரு மாபெரும் ரகசியக்கசிவு. பெண்ட்டகன் என்பது அமெரிக்க ராணுவத் தலமையகம். அவர்களுடைய உச்சகட்ட கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் அதிமுக்கிய ஆவணத்தை, ப்ராட்லி மானிங் எனப்படும் 22 வயதேயான ஒரு சாதாரண அடிப்படைநிலை ராணுவ அனலிஸ்ட் விக்கிலீக்குத் தெரிவித்துவிட்டார் என்கிறார்கள். அப்படி ஒரு சாதாரண அதிகாரி ஒட்டுமொத்த ஆவணங்களையும் எடுத்துச்செல்லும் அளவிற்கா பாதுகாப்பு இருக்கிறது என்பது இந்த வெடிப்பால் கிளப்பப்படும் மற்றொரு முக்கியமான கேள்வி.




ப்ராட்லி மானிங் மட்டுமே அளித்தாரா அல்லது வேறு எவரும் இருக்கிறார்களா என்பதை பெண்ட்டகனும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் விசாரித்து வருவதாகச் சொல்கிறார்கள். ரகசியத்தைக் கடத்திய ப்ராட்லி தேசத் துரோகியாகக் கருதப்பட்டு விசாரிக்கப்படுகிறார். உடனடியாக விக்கிலீக் தன் தளத்தில் இருக்கும் தகவல்களை அழிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண்ட்டகனும் மீண்டும் மீண்டும் பூச்சா காட்டி வருகிறது. இவ்வளவு தூரம் வெளியேறிய பிறகு குதிரைகள் எல்லாம் தப்பிய பிறகு, உலகுக்கே ‘ராஜா காது கழுதைக் காது’என்று தெரிந்த பிறகு லாயத்தைப் பூட்ட முயற்சிக்கிறார்கள், ராஜாவுக்குப் புதுத் தலைப்பாகை கட்டுகிறார்கள்.

விக்கிலீக்கை ஆரம்பித்த ஜூலியன் அசாங்கேயை உலகம் முழுவதும் தேடி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அரசும் அவரைத் தேடி வருவதாகச் சொல்கிறது. நேற்று வரை உலகத்தில் அபாயகரமான மனிதனாக இருந்த பின் லாடனைப் பின்னுக்குத் தள்ளி விட்டு உலகத்தின் மிகவும் அபாயகரமான ஆளாக அசாங்கே இன்று அமெரிக்க அரசாங்கத்தால் கருதப்படுகிறார். அவருக்கு உதவிய அனைவரும் ரகசியமாகக் கைது செய்யப்படுகிறார்கள் வேவு பாக்கப்படுகிறார்கள். அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்து வருகிறது. விரைவிலேயே இந்த அமைப்பை ஒட்டு மொத்தமாக உலக அளவில் தடை செய்து இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு உள்ளாகும் வாய்ப்பும் உள்ளது. இப்படியாகப்பட்ட சூழ்நிலையில் பெண்ண்டகன் மிச்சமிருக்கும் 15000 பக்கங்களையும் வெளியிட வேண்டாம் என்று கெஞ்சாத குறையாக மிரட்டி வருகிறது. வெள்ளை மாளிகை, பாதுகாப்பு அமைச்சகம், சிஐஏ என்று அனைத்து அமைப்புகளும் அசாங்கேயிடம் வெளியிட வேண்டாம் என்று கெஞ்சிக் கூத்தாடினாலும், அசாங்கே அவற்றை வெளியிட்டே தீருவேன் என்று அறிவித்திருக்கிறார். அமெரிக்கா ஜூலியன் அசாங்கேயையும், விக்கிலீக்கையும் ஒரு தீவீரவாத அமைப்பாக அறிவிக்க முயல்கிறது. அசாங்கேயையும் அவரது கூட்டாளிகளையும் கண்டு பிடித்துக் கொல்ல வேண்டும் என்று கூக்குரல்கள் எழுகின்றன. தேசியவாதிகள் விக்கிலீக்கு எதிராகப் போர்க்கொடி பிடித்துள்ளனர். மர்ம நாவல்களில் வரும் ஹீரோவை சந்தேகப்பட்டு உலகத்தின் அனைத்து உளவு அமைப்புகளும் கொலை செய்யத்தேடுவது போல மர்மமான நபரான அசாங்கே இன்று உலகத்தின் அத்தனை ரகசிய போலீஸ்களாலும் தேடப்பட்டு வருகிறார்.

சர்வாதிகார அடக்குமுறை உள்ள, லஞ்ச ஊழல் உள்ள நாடுகளில் தனது ரகசிய அம்பலங்கள் மூலம் மாற்றங்களைக் கொணர்வதே தன் நோக்கம் தான் ஒரு குற்றவாளி அல்ல, உலக நாடுகளை உய்விக்க வந்த ஒரு இணையப் புரட்சியாளர் என்கிறார் அசாங்கே. தமிழில் உள்ள எண்ணற்ற இணையப் புரட்சியாளர்கள் போல இல்லாமல் இவர் ஒரு நிஜமான தகவல் வெளியீட்டுப் புரட்சியையே நிகழ்த்தியுள்ளார். செய்தியை உருவாக்கியவர்களை விட்டுவிட்டு செய்தியாளனைத் தூக்கில் போடுகிறார்கள் என்கிறார் அசாங்கே. அமெரிக்க அரசோ இந்த ரகசிய ஆவண வெளியீட்டால் ஆப்கானில் உள்ள ராணுவத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் படைகளுக்கு உதவி வரும் இன்ஃபார்மர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டு விட்டதால் தாலிபான்கள் அவர்களைக் கொன்று விடுவார்கள். மேலும் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளின் அணுகுமுறைகள் திட்டங்கள் வெளியிடப்பட்டு விட்டபடியால் இனிமேல் அவற்றை பின்பற்ற முடியாது ஆக அனைத்து விதங்களிலும் அமெரிக்க பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்து விட்ட விக்கிலீக் ஒரு வில்லன் லீக் என்கிறது. விக்கிலீக் ஆப்கான் போரின் ராணுவ ரகசியங்களைக் கிடைத்தவுடன் வெளியிட்டுவிடவில்லை. அவற்றை நன்கு அலசி, ஆராய்ந்து அமெரிக்க அரசுக்கும் தகவல் தந்துவிட்டு கார்டியன், நியூயார்க் டைம்ஸ், டெர் சீகல் போன்ற ஐந்து நாளிதழ்களுக்கு இந்தத் தகவல்களை வெளியிடும் உரிமையை அளித்திருக்கிறது. இந்த நாளிதழ்களும் இந்தச் செய்திகளை உடனடியாக வெளியிட்டுவிடாமல் நேரம் எடுத்துக் கொண்டு அவற்றின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து இவை யாவும் உண்மையான பெண்ட்டகன் ஆவணங்களே என்பதை உறுதி செய்த பிறகு, முழுத்தகவல்களையும் வெளியிடாமல் தேர்ந்தெடுத்து சில பகுதிகளை மட்டுமே வெளியிட்டுள்ளன.

விக்கிலீக்கின் அம்பலத்தை அமெரிக்க அரசும், ஊடகங்களும் எதிர் கொள்ளும் விதத்தை நாம் பார்க்கும் முன்னால், அதற்கான காரணங்களை நாம் அலசும் முன்னால், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை நாம் நோக்கும் முன்னால், விக்கிலீக் வெளியிட்ட ரகசியங்களில் நமக்கு ஆர்வம் உள்ள சில பகுதிகளின் சுருக்கத்தை முதலில் பார்த்து விடலாம். விக்கி லீக் வெளியிட்ட பெண்டகன் ஆவணங்களில் அமெரிக்க அரசின் கீழ்நிலை உளவாளிகள், ஒற்றர்கள், தகவல் அளிப்பவர்களில் இருந்து, மேல் நிலை அமைப்புகள் வரை அவர்கள் சேகரித்த உளவுத் தகவல்கள், அவற்றை ஆராய்ந்ததில் கிடைத்த முடிவுகள், ஆலோசனைகள், தாக்குதல் வியூகங்கள், தந்திரங்கள், உத்திகள் என்று அனைத்து நுண்ணிய தகவல்களும் ஒரு கடிகாரத்தை உடைத்தால் சிதறி ஓடும் பாகங்கள் போல இன்று வெளியே கிளம்பிப் பொதுப்பார்வைக்குக் கிடைக்கின்றன. அவற்றில் சில முக்கியமான தகவல்களை முதலில் நாம் காணலாம்.


முதலில் ஆப்கான் போரில் பாக்கிஸ்தான் அரசின், ராணுவத்தின், அதன் உளவுத் துறையின் பங்குகள் குறித்து அமெரிக்காவின் ராணுவம் மற்றும் உளவுத் துறைகள் சேகரித்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் சில:
யாரை எதிர்த்து இந்த ஆப்கான் யுத்தத்தை அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் நடத்தி வருகின்றனவோ, யாரைப் பிடிக்க அமெரிக்கா இந்த மாபெரும் போரை ஆரம்பித்துள்ளதோ, யாரை அழிக்க அமெரிக்கா சபதம் எடுத்துள்ளதோ, யாரை உலகத்தின் எதிரியாக அமெரிக்காவும் மேலை நாடுகள் சித்தரித்துள்ளனவோ, யாரைப் பிடிக்க அமெரிக்கா தன் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களின் உயிர்களை இழந்துள்ளதோ, யாரால் செப்டம்பர் பதினொன்று அன்று ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனரோ, எந்த அமைப்பால் லண்டனிலும், ஸ்பெயினிலும், இந்தியாவிலும், ஆப்கானிலும், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்களோ, அந்த பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ யும் கூட்டணி வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

எந்த பாகிஸ்தான் மக்களின் நலனுக்காக அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் தானமாக வழங்கி வருகிறதோ, எந்த பாகிஸ்தானின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி வருகிறதோ, அதே பாகிஸ்தான் ஒருபுறம் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை வாங்கி முழுங்கிவிட்டு, யாரைப் பிடிப்பதற்காக அமெரிக்கா அந்த நிதியை வழங்கியதோ அதே பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தானம் கொடுத்த அமெரிக்காவின் அடி மடியிலேயே கை வைக்கிறது என்பதுதான் அமெரிக்க அரசின் பல்வேறு அமைப்புகள் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்த உண்மைகள். அதைத்தான் பெண்டகன் மிக ரகசியமாக யாரிடமும் உண்மையைச் சொல்லாமல் இதுநாள்வரை பாதுகாத்து வந்திருக்கிறது. இன்று விக்கிலீக் போட்டு உடைத்து விட்டது.

செனட்டர்கள் ஜான் கெர்ரி, லூகர், பெர்மன் ஆகியோர் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் படி அமெரிக்கா ஒரு அமெண்மெண்ட்டை காங்கிரஸில் ஒப்புதல் பெற்றது. அதன் படி ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் வீதம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் 7.5 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானின் வளர்ச்சிக்காக அதன் மக்களின் முன்னேற்றத்திற்காக அமெரிக்க அரசு நிதியுதவி வழங்க தீர்மானம் இயற்றி பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும் 2.5 பில்லியன் டாலர்களுக்கு இந்த ஆண்டும் 3 பில்லியன் டாலர்கள் வரை அடுத்த ஆண்டும் ராணுவ உதவியையும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அள்ளி வழங்கியுள்ளது. இப்பொழுது பாகிஸ்தானில் பெய்த வெள்ளத்தை மழைச்சேதத்தை பெரும் இழப்பாகக் காட்டி பாகிஸ்தானுக்கு மேலும் பல பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்க அமெரிக்காவும் நேச நாடுகளும் ஐ.நாவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இவை போக அணு ஒப்பந்தம், ராணுவப் பயிற்சிகள் என்று பல்வேறு விதங்களில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முன்னெப்பொழுதையும் விட அதிகமான நிதியுதவியை அள்ளி வழங்குகிறது. ஏன்?

பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு உதவினால் அதன் மக்களின் நல்லெண்ணத்தைப் பெறலாம், அவர்களின் நல்லெண்ணத்தைப் பெற்றால் ஆட்சியாளர்களின், ராணுவத்தினரின் நன்மதிப்பைப் பெறலாம் அதனால் அவர்கள் அமெரிக்க ராணுவத்தினருக்கு உதவி செய்து அல்கொய்தாவையும், தாலிபான்களையும் இன்னபிற பயங்கரவாத அமைப்புகளையும் ஒழிக்க உதவுவார்கள். அவர்கள் அனுமதியின்றி, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு இன்றி இதை நடத்தவே முடியாது. ஆகவே பாகிஸ்தானுக்குக் கிட்டத்தட்ட பத்து பில்லியன் டாலர்கள் ஐம்பதினாயிரம் கோடி ரூபாய்களை அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்து தானமாக வழங்கி வருகிறது. இவ்வளவு தானம் கொடுத்தும் பாகிஸ்தான் அமெரிக்காவுக்குச் செய்த உதவிகள் என்ன என்பதைத்தான் அமெரிக்காவின் உளவு அமைப்புகள் கண்டுபிடித்து திருடனுக்குத் தேள் கொட்டியவன் கதையாக இதை வெளியில் விட்டால் அவமானம், கேவலம், தாங்கள் போட்ட திட்டங்களுக்கு பேரிடி என்பதை உணர்ந்து ரகசியமாக அமுக்கி வைத்திருந்தைத்தான் இன்று விக்கிலீக் எடுத்து வீதியில் எறிந்திருக்கிறது. அப்படி அமெரிக்கா செய்த பல பில்லியன் டாலர் உதவிக்கு பாகிஸ்தான் செய்த கைமாறுகளை விக்கிலீக் அமெரிக்காவின் ராணுவத்தின் அறிக்கையில் இருந்தே எடுத்து பட்டியலிட்டிருக்கிறது. ‘சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்’ என்பது தன் காசை செலவழித்துத் தனக்கே தீமைகளை வருவித்துக் கொள்பவர்களைக் குறித்துக் கேலியாக தமிழ் இணையத்தில் சொல்லப்படும் ஒரு புதுமொழி. அப்புதுமொழி அமெரிக்காவுக்கு நன்றாகவே பொருந்திப்போகிறது.


பாகிஸ்தான் அமெரிக்காவுக்குச் செய்த சேவைகளை அமெரிக்க ராணுவத்தின் ஆவணங்களில் இருந்தே விக்கிலீக் பட்டியலிடுகிறது. அவையாவன:



1. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்கும் தாலிபானுக்கும் நெருங்கிய உறவு உள்ளது.
2. ஐஎஸ்ஐ அமைப்பு தாலிபான், அல்க்வைதா ஆகிய அமைப்புகளுக்கு ராணுவ உதவியும், பண உதவியும் அமெரிக்க ராணுவம் பற்றிய தகவல்களையும் அளித்து அமெரிக்க ராணுவத்தினரைக் கொல்ல உதவி செய்கிறது
3. அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போராட தாலிபான்களுக்கு முழுப்பயிற்சியும் பண, ராணுவ, ஆள் உதவியையும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அளித்துள்ளது
4. பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்களுடன் சேர்ந்து அமெரிக்கப்படைகளைக் கொன்றுள்ளது.
5. அமெரிக்கப் படைவீரர்களுக்கு விஷம் கலந்த பீர் பாட்டில்களை ஆப்கானுக்குள் ஐஎஸ்ஐ அனுப்பி வைத்துள்ளது.
6. ஆப்கானிஸ்தானின் அதிபர் கார்சாயையும் பிற முக்கிய தலைவர்களையும் படுகொலை செய்ய ஐஎஸ்ஐ அமைப்பு தாலிபானுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளது.
7. ஒவ்வொரு முறையும் அமெரிக்கப் படையினரை தாலிபான்கள் தாக்கியவுடன் அவர்களை பாகிஸ்தானுக்குள் ஓடிப் பாதுகாப்பாக ஒளிந்து கொள்ள பாகிஸ்தான் ஏற்பாடு செய்து தந்துள்ளது
8. அப்படி தாலிபான்களுடன் சேர்ந்து சதித் திட்டம் போடும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அதிகாரிகளின் பட்டியல் அமெரிக்க அரசிடம் சிக்கியுள்ளது.
9. பாகிஸ்தானின் ராணுவ ஜெனரலும் பாகிஸ்தானின் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவருமான ஜெனரல் பெர்வஸ் அஸ்லக் கயானி 2007 ஆண்டு வரை ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக இருந்து தாலிபான்களுக்கு அனைத்து விதத்திலும் உதவி செய்த பின் இப்பொழுது ராணுவத் தளபதியாக இருந்து கொண்டு அவர்களுக்கு மறைமுகமாக உதவி வருகிறார்
10. ஐஎஸ்ஐ-யின் தந்தை என்று அழைக்கப்படும் முன்னாள் ராணுவ ஜெனரல் ஹமித் குல் ஓய்வு பெற்ற பின்னாலும் கூட அமெரிக்கப் படைகளின் மீதான தாக்குதல்களைத் திட்டமிட்டு தாலிபான்கள் மூலமாக நடத்தி வருகிறார். அதுவும் பாகிஸ்தான் ராணுவத்தின் துணை கொண்டே நடக்கின்றது.
11. ஹமீத் குல்லின் ஆலோசனையின் படி ஐஎஸ்ஐ ஆயிரக்கணக்கான தற்கொலைப் படையினரைப் பயிற்சி அளித்து ஆப்கானில் உள்ள அமெரிக்கப் படையினரையும் ஆப்கானியர்களையும் தாக்கிக் கொன்று வருகிறது.
12. ஹமீத் குல், பெஷாவரில் உள்ள இரண்டு முக்கியமான பெரிய மதராசாக்களில் இருந்து ஏராளமான தற்கொலைப் படையினரைத் தயாரித்து தாலிபான்களுக்குத் தேவையான குண்டு வைப்பவர்களை அனுப்பி வைக்கிறார்.
13. ஆப்கானிஸ்தானில் குண்டு வைக்கும் 95 சதவிகித தற்கொலைப் படையினர் பாகிஸ்தானின் மதராசாக்களில் உருவாக்கப்படுபவர்களே.
14. ஜூலை 7, 2008-ஆம் வருடம் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் தாலிபான்களின் தற்கொலைப் படையினரால் தாக்கப்பட்டது. இந்தியத் தூதரக அதிகாரிகள் உட்பட 58 பேர்கள் கொல்லப்பட்டனர். 140 பேர்கள் படுகாயமடைந்தனர். இப்படி இந்திய தூதரகத்தைக் குண்டு வைத்துத் தாக்கப்போகிறார்கள் என்ற தகவலை போலந்து நாட்டு உளவுப்பிரிவினர் ஏற்கனவே கண்டுபிடித்து அமெரிக்காவை எச்சரித்துள்ளனர். இருந்தும் இந்திய தூதரகம் தாக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை திட்டமிட்டதே பாகிஸ்தானின் ராணுவ தளபதியான கியானியும், ஹமீத் குல்லுமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்காக ஐ எஸ் ஐ 20,000 டாலர்களை ஒதுக்கியிருக்கிறது. அனைத்து தகவல்களையும் போலந்து நாட்டு உளவுப்பிரிவு கண்டுபிடித்து அளித்த பின்னாலும் கூட இந்த தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது
15. பின்லாடனை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தன் பாதுகாப்பில் வைத்திருக்கிறது.
16. அமெரிக்காவிடம் இருந்து பெற்ற ராக்கெட் மிசைல்களையும் இன்ன பிற நவீன ஏவுகணைகளையும் தாலிபான் வசம் பாகிஸ்தான் அளித்து, அதை வைத்தே அமெரிக்க ஹெலிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.
17. அமெரிக்க பத்திரிகையாளர்கள், ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியுள்ளது.
இவை போன்ற அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நண்பனும், நட்புநாடும், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முக்கியமான சகாவும், அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் பிழைத்து வரும் நாடுமாகிய பாகிஸ்தான் செய்த நூற்றுக்கணக்கான சேவைகளை அமெரிக்காவின் ராணுவமும் பல்வேறு உளவு அமைப்புக்களும் கண்டுபிடித்து, அவற்றை ரகசியமாக வெளியில் சொல்லாமல் மறைத்து மேலும் மேலும் பாகிஸ்தானை நம்பி காசைக் கொட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இன்னமும் மேலும் பல பில்லியன்களைக் கொட்டவும் தயாராக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மோசடியைத்தான் விக்கிலீக் இன்று வெளிக்கொணர்ந்திருக்கிறது. ‘ரன்னிங் வித் தி ஹேர் அண்ட் ஹண்டிங் வித் தி ஹவுண்ட்’ என்பது போல கூட இருந்தே குழி பறித்தாலும் தான் குழியில் தள்ளப்பட்டதை அமெரிக்கா மறைக்கப் பார்த்திருக்கிறது. இப்பொழுது அமெரிக்கா பாகிஸ்தான் மூலமாகத் தனக்குத் தானே காசு கொடுத்து வெட்டிக் கொண்ட மரணக் குழியை விக்கிலீக் படம் பிடித்து ஊருக்கெல்லாம் காட்டியிருக்கிறது.
இந்த உண்மைகள் அனைத்துமே இந்தியா பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கூரையின் மேல் ஏறி நின்று உரக்கக் கத்தி வருபவைதான். இந்தியர்களுக்கும் இந்திய உளவு அமைப்புகளுக்கும் இந்த தகவல்கள் ஏதுமே புதிது கிடையாது. செப்டம்பர் 11 தாக்குதலே இந்தியாவில் இருந்து காந்தாஹாருக்குக் கடத்தப்பட்ட விமானத்திற்காக விடுதலை செய்யப்பட்ட பயங்கரவாதிதான் திட்டமிட்டு நடத்தியிருக்கிறான். ஆக இந்த ஆப்கான் போருக்கு ஆரம்ப காரணமே பாகிஸ்தான்தான். இவ்வளவு தூரம் விக்கிலீக் வெளியிட்ட ரகசியங்களைப் படித்த உங்களுக்கும் எனக்கும் எவருக்குமே கீழ்க்கண்ட சில அடிப்படைக் கேள்விகள் தோன்றும்.
1. இந்த எளிய உண்மை கூடவா அமெரிக்காவுக்குத் தெரியாது?
2. இவ்வளவு தூரம் ஆதாரங்களைக் கண்டு பிடித்த அமெரிக்க ராணுவத் தலைமைக்கு அதைக் கண்டிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ, தடுக்கவோ, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவோ கூடவா தெரியாமல் போயிருக்கும்?
3. ஏன் இந்தக் கண்டுபிடிப்புகளையெல்லாம் ரகசியமாக வைத்திருந்தார்கள்? ஏன் இப்பொழுது வெளியானால் பதறுகிறார்கள்? பாகிஸ்தான்காரர்கள் அல்லாவா இது வெளியானதற்குக் கவலைப்பட வேண்டும்? அவர்கள் கவலையில்லாமல் அமெரிக்காவைத் தொடர்ந்து மிரட்டி காசு பறித்துக் கொண்டிருக்கிறார்கள்
4. ஒரு ஈரான் அதிபரை கடும் எதிரியாகப் பாவிக்கும் அமெரிக்கா, ஒரு வட கொரியாவை பயங்கர வில்லனாகக் கருதும் அமெரிக்கா, பாகிஸ்தான் இவ்வளவு செய்த பின்னும் பாகிஸ்தான் மீது பாச மழை, பண மழை பொழியும் ரகசியம் என்ன?
5. இந்தத் தகவல்கள் எல்லாம் ஏதோ பாகிஸ்தானைப் பிடிக்காத இந்தியா சொன்னதல்ல, இவையெல்லாம் அமெரிக்காவின் ராணுவத் தலமையகமே சேகரித்து வைத்துள்ள ரகசியத் தகவல்கள். மறுக்க முடியாத ஆதாரங்கள், உண்மைகள். இந்தத் தகவல்களின்படி அமெரிக்காவின் மேல் பாகிஸ்தான் இத்தனை வருடங்களாக மறைமுகமாக ஒரு பெரிய யுத்தத்தையே அமெரிக்காவிடம் வாங்கிய பணத்தை வைத்தே நடத்தியிருக்கிறது? அப்படி இருந்து ஏன் அமெரிக்கா இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் பாகிஸ்தானை அடைகாக்கிறது?
6. வேறு ஒரு நாடு இப்படி நடந்திருந்தால் அந்த நாட்டை இருந்த இடம் தெரியாமல் அணு குண்டு போட்டு அமெரிக்கா அழித்திருக்காதா என்ன? அந்த நாடு உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போயிருந்திருக்குமே? ஏன் பாகிஸ்தானிடம் அமெரிக்கா தொடர்ந்து ஏமாறுகிறது? ஏன் தன் சொந்த செலவிலேயே பாகிஸ்தானிடம் போய் தனக்கே அமெரிக்கா சூனியம் வைத்துக் கொள்கிறது?
7. ஏன் அமெரிக்காவின் அதிபர் முதல் சாதாரண பத்திரிகையாளர் வரை பாகிஸ்தானுக்கு இன்றும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்?
8. ஒரு இந்தியா பாகிஸ்தானின் அட்டூழியங்களுக்குப் பயப்படுவதின் காரணங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. சர்வ வல்லமை படைத்த வல்லரசான ஆனானப்பட்ட அமெரிக்காவே ஏன் பாகிஸ்தானைக் கண்டு பம்ம வேண்டும்?


இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் காணும் முன்னால் இந்த விக்கிலீக் வெடிப்பை எப்படி அமெரிக்காவின் ஜனாதிபதியும், வெளியுறவுத்துறையும், சிஐஏவும், ராணுவத் தலைமையும், பத்திரிகைகளும், டெலிவிஷன்களும், ஆய்வாளர்களும், நிபுணர்களும், அரசியல்வாதிகளும், செனேட்டர்களும், பாக்கிஸ்தானும், இந்தியாவும் எதிர்கொண்டார்கள் என்பதைப் பார்த்துவிடலாம். அதன் மூலம் அமெரிக்காவின் இந்த மர்மமான அணுகுமுறைகளுக்கும் மேற்கண்ட கேள்விகளுக்கும் ஓரளவுக்கு நாம் விடை காண முயலலாம்.